குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் முடக்கப்பட்ட சொத்துகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் முடக்கப்பட்ட சொத்துகள் மற்றும் வசூலிக்கப்பட்ட அபராத தொகையை திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொது சொத்துகள் சேதம்
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இதில் பொது சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், அடித்து நொறுக்கப்பட்டும் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. லக்னோ உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த வன்முறை சம்பவங்கள் பரவின.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இதைத்தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான இழப்பீட்டை போராட்டக்காரர்களிடம் இருந்தே வசூலிக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 274 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அத்துடன் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பர்வேஸ் ஆரீப் டிட்டு என்பவர் உள்பட பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அனுமதிக்க வேண்டும்
இதில் உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை மதித்து, 274 பேருக்கு அனுப்பப்பட்ட அனைத்து நோட்டீசுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இருப்பினும் பொது சொத்து சேதம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த வழிகாட்டுதல்களின் படி அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நீதிபதிகள் மறுப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பொது சொத்துகளை சேதப்படுத்தும்போது, அதை செய்தவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்ற நோக்கில்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது என்ன விளக்கமளித்தனர்.
பின்னர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் முடக்கப்பட்ட சொத்துகளையும், வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையையும் மீண்டும் உரியவர்களிடமே உத்தரபிரதேச அரசு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.