‘இந்திய பொருளாதாரம் வேகமாக வளருகிறது’ - நிதி அமைச்சகம் தகவல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக நிதி அமைச்சக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-17 00:11 GMT
புதுடெல்லி, 

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் வளர்ச்சி விகிதம் உந்தப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், “உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களால், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும். பன்னாட்டு நிதியம், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியை முந்தைய கணிப்பை விட குறைத்துள்ளது. ஆனால், இந்திய பொருளாதார வளர்ச்சியை மட்டும் முன்பை விட ஏறுமுகத்தில் மதிப்பிட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில், இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது.

ஆனால், பட்ஜெட்டில் மத்திய அரசு எடுத்த பல்வேறு முன்முயற்சிகளால், பெரிய நாடுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடு என்று பெயரை இந்தியா பெற்றுள்ளது. கொரோனா ஏற்படுத்திய கவலைகளும், நிச்சயமற்ற தன்மையும் தணிந்த பிறகு, நுகர்வு அதிகரித்து, தேவை உயரும். அதனால், தேவையை பூர்த்தி செய்ய தனியார் துறை முதலீட்டை உயர்த்தும். அந்த சூழ்நிலை, இந்திய பொருளாதாரம் வளருவதற்கு வழிவகுக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்