டிக்கெட் இல்லாமல் பயணம்..! ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில கும்பல்

ஓடும் ரயிலில் டிக்கெட் கேட்ட ரெயில்வே டிக்கட் பரிசோதகரை தாக்கிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை இரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Update: 2022-02-16 14:49 GMT
கேரளா,

எர்ணாகுளம் - ஹவுரா இடையே ஓடிக்கொண்டிருந்த அந்தியோதயா ரயிலில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி இரண்டாவது இருக்கை வசதி உள்ள பெட்டியில் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். முன் பதிவு உள்ள இந்த கம்பார்ட்மெண்டில் டிக்கெட் இல்லாமல் இவர்கள் பயணம் செய்ததாக தெரிகிறது. 

அப்போது அங்கு டிக்கெட் பரிசோதகராக வந்த பெசி (33) என்பவர் அவர்களிடம் டிக்கெட் கேட்டார். அப்போது அவர்கள் டிக்கெட் இல்லை என்று பதிலளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்த உடன் பரிசோதகருடன் தகராறில் ஈடுபட்டனர்.  பின்னர் டிக்கெட் பரிசோதகரை அந்த கும்பல் தாக்கி அவர் வைத்திருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் அவரது உடைமைகளை வெளியில் வீசியுள்ளனர். 

ஆலுவா ரயில் நிலையத்தில் ரயில் வந்த போது இரவு ஒரு மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த பெஸ்சி, ரயில் திருச்சூர் ரயில் நிலையம் வந்தடைந்த போது, அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். 

விசாரணையில் அந்த கும்பல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அதில் சவுக்கத் அலி (27) அணிக் கூல் ஷேக் (25 ) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்

பெஸ்சியிடமிருந்து பறித்து வெளியே வீசபட்ட கைப்பை சில பயணிகளால் மீட்கப்பட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக தெரிகிறது. இதே கும்பல் அதனை திருடி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

டிக்கெட் பரிசோதகர் பெஸ்சி உள் காயங்கள் அதிகம் இருப்பதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் தந்த புகாரின்பேரில் மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை ரயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்