இளவரசருக்காக எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு

கடந்த 2014- ஆம் ஆண்டு, இளவரசருக்காக (ராகுல் காந்தி) எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது என ராகுல் காந்தியை பிரதமர் மோடி சாடியுள்ளார்.

Update: 2022-02-14 15:39 GMT
அமிர்தசரஸ், 

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். 

காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா?  காங்கிரசை கட்டுப்படுத்தும் குடும்பம், பஞ்சாப் மீதான பழைய பகைக்காக  பழிவாங்குகிறது. 

கடந்த 2014- ஆம் ஆண்டு,  இளவரசருக்காக (ராகுல் காந்தி) எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது. நான் பதான் கோட் மற்றும் இமாசல பிரதேசம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், எனது ஹெலிகாப்டர் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இளவரசர் அமிர்தசரஸில் இருந்ததால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  ராகுல் காந்தி எம்.பியாக மட்டுமே இருந்தார். எதிர்க்கட்சிகளை பணியாற்ற விடக்கூடாது என்பதை காங்கிரஸ் வழக்கமாக கொண்டுள்ளது” என்றார். 

மேலும் செய்திகள்