ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..!
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் பிப்ரவரி 14 முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர்,
கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து பெண்கள் வகுப்பிற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து அந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அனைவரும் ஹிஜாப் தங்களது உரிமை என்றும், அதை அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது என்றும் கூறி போராட்டத்தை நடத்தினார்கள். இதற்கான விசாரணை கர்நாடகா ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும் பதற்றத்தை குறைக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 144 தடை உத்தரவை மாவட்ட துணை ஆணையர் பிறப்பித்துள்ளார். ஹிஜாப் மற்றும் காவி சால்வை சர்ச்சையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலைப் பள்ளிகளையும் சுற்றி 200 மீட்டர்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டி.சி.குர்மா ராவிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளியை சுற்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி இல்லை. ஒரு தனிநபரின் தனிப்பட்ட நம்பிக்கை அல்லது மதத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் அல்லது போராட்டங்கள் உட்பட அனைத்து வகையான கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. குச்சிகள், தடிகள், கத்திகள் அல்லது கொடிய ஆயுதங்களைக் கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.