மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: தமிழக அரசின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.

Update: 2022-02-08 20:12 GMT
புதுடெல்லி, 

மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியமர்த்த பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் வக்கீல் அ.ராஜராஜன், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. விரைந்து விசாரிக்க கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுவும் நிலுவையில் இருந்து வருகிறது. எவ்வித இடைக்கால நிவாரணமுமின்றி கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 13,000 பேர் இந்த சட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தை இறுதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு சாதகமாக சில முடிவுகளை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அரசுக்கு முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கப்படவுள்ளது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்