லதா மங்கேஷ்கரை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட ஆஷா போஸ்லே

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரை அவரது சகோதரி மற்றும் பழம்பெரும் பாடகியான ஆஷா போஸ்லே மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து உள்ளார்.

Update: 2022-02-05 17:55 GMT

மும்பை,


பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கடந்த ஜனவரியில் கொரோனா மற்றும் நிம்மோனியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு, உயிர்காக்கும் சிகிச்சை (வெண்டிலேட்டர்)  அளிக்கப்பட்டு வந்தது.  இதன்பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தது.  எனினும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் இன்று மோசமடைந்து உள்ளது.  அவர் இன்னும் ஐ.சி.யு.வில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் சகோதரி மற்றும் பழம்பெரும் பாடகியான ஆஷா போஸ்லே (வயது 88) மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று அவரது நலம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்து உள்ளார்.  இதன்பின்பு, ஊடகத்தினரிடம் பேசிய போஸ்லே, லதா மங்கேஷ்கர் நலமுடன் உள்ளார் என மருத்துவர் கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்