கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் நடந்தது என்ன...? போட்டு உடைத்தது, ஆஸ்திரேலியா..!
20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன படையினர் 38 பேர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனப்படையினர் கொடூரமான ஆயுதங்களுடன் வந்து இந்திய வீரர்களுடன் மோதினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த மோதலில் தனது தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதை முதலில் சீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. ஆனால், சீனப்படையினர் 45 பேர் பலியானதாக ரஷியா கூறியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனப்படையினர் 4 பேர் பலியானதாக சீனா அறிவித்தது. அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது.
இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகை ‘தி கிளாக்ஸன்’ புலனாய்வு செய்து, சம்பவத்தன்று இரவு நடந்தது என்ன என்பது பற்றி தெளிவான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி இரவு இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ்பாபு, சீன உள்கட்டமைப்பைத் தகர்ப்பதற்காக கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்தபோது, கர்னல் குய் பாபோவ் தலைமையில் சீன படையினர் 150 பேர் காத்திருந்தனர். குய் பாபோவ் போர் அமைப்பை உருவாக்கும்படி சீன படையினருக்கு உத்தரவிட்டார்.
அந்த தருணமே அவரை இந்திய ராணுவ வீரர்கள் சூழ்ந்து விட்டனர். கடைசியில் அவரை மீட்பதற்கு சீனப்படை வீரர்கள் 2 பேர் (பலியானதாக சீனா வெளியிட்ட 4 பேர் பட்டியலில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர்) முன்வந்தனர்.
பட்டாலியன் கமாண்டர் சென் ஹொங்ஜூன் மற்றும் சிப்பாய் சென்சியாங்ராங் ஆகிய அந்த இருவரும், இந்திய ராணுவத்தின் வட்டத்துக்குள் நுழைந்து, தங்கள் கமாண்டர் கர்னல் குய் பாபோவை தப்பிக்க வைப்பதற்காக உருக்கு பைப்புகள், கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உடல்ரீதியான சண்டையை தொடங்கினர். இந்திய ராணுவ வீரர் தாக்கியதில் கர்னல் குய் பாபோவ் தலையில் படுகாயம் அடைந்து பின்வாங்கினார்.
சீன பட்டாலியன் கமாண்டர் சென் ஹோங்ரன் மற்றும் சிப்பாய் சென்சியாங்ராங் ஆகிய இருவரையும் இந்திய ராணுவத்தினர் கொன்று விட்டனர். இந்த தாக்குதலை மற்றொரு சீன படைவீரரான சியாவோ சியான் கேமராவில் பதிவு செய்தார்.
ஆனால் நடந்த சண்டையில் அவர் கேமராவை விட்டு விட்டு இந்தியப்படையினரை தாக்கத்தொடங்கினார். ஆனால் அவர் இந்திய வீரர் ஒருவரின் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை விட்டு கர்னல் குய் பாபோவ் வெளியேறிய பிறகு, சென் ஹோங்ரன், சென்சியாங்ராங் மற்றும் சியாவோ சியான் ஆகியோரது உடல்களை பார்த்து, சீன படையினர் பதற்றம் அடைந்து பின்வாங்க தொடங்கினார்கள்.
அப்போது சீன படையின் வாங் ஜூரான் என்பவர் தனது துணைவி மா மிங்குடன் சேர்ந்து, தனது படை வீரர்கள் பின்வாங்குவதற்கான வழியைக் காட்டி, அவர்களை ஆபத்தில் இருந்துமீட்க முன்வந்தார்.
அந்த நேரத்தில் தண்ணீரில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கான ‘வாட்டர் பேண்ட்’ அணியக்கூட சீன படையினருக்கு நேரம் இல்லை. அவர்கள் அந்த இருட்டிலும் உறைந்து போன பனி ஆற்றை கடக்க முடிவு செய்தனர்.
ஆனால் அந்த நேரத்தில் நதியில் திடீரென தண்ணீர் பெருகியது. காயம் அடைந்த சீன படையினர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இதுவரை அவர்களை பற்றி எந்த தகவலும் சீன இணைய உலகில் இல்லை.
குறைந்தபட்சம் அன்று இரவு 38 சீன படை வீரர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டும், நீரில் மூழ்கியும் பலியாகினர். சம்பவத்துக்கு பிறகு சீனப்படையினர் உடல்கள் முதலில் ஷிகுவான்ஹே தியாகி கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. பின்னர் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் அவர்களது ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்வான் மோதலின்போது சீன படை வீரர்கள் 38 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டும், நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர் என்பதை தெள்ளத்தெளிவாக சம்பவ நேரலை போல ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகை வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.