மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி வீடு அருகே திக்விஜய்சிங் தர்ணா

மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு டெம் மற்றும் சுதாலியா அணை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Update: 2022-01-21 19:09 GMT

போபால், 

மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு டெம் மற்றும் சுதாலியா அணை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் 3 மாவட்டங்களில் சில கிராமங்களும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தண்ணீரில் மூழ்கி விடும் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக பேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானிடம் முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.யுமான திக்விஜய்சிங் நேரம் கேட்டிருந்தார். ஆனால் நேரம் ஒதுக்கப்படாததால், நேற்று சிவராஜ்சிங் சவுகான் இல்லம் அருகே தன் ஆதரவாளர்களுடன் திக்விஜய் சிங் தர்ணா போராட்டம் நடத்தினார்.

4 மணி நேரம் போராட்டம் நீடித்தது. அப்போது, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மணிஷ் ரஸ்தோகி, 23-ந் தேதி முதல்-மந்திரி சந்திப்பார் என்று திக்விஜய்சிங்கிடம் உறுதி அளித்தார். அதையடுத்து, திக்விஜய்சிங் தனது போராட்டத்தை விலக்கிக்கொண்டார். 23-ந் தேதியும் முதல்-மந்திரி சந்திக்காவிட்டால், அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் சிறிது நேரம் பங்கேற்றார்.

மேலும் செய்திகள்