தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் ‘தர்ம யுத்தம்’ ஆரம்பம் - பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட தெலுங்கானாவிற்கு வருகை தந்துள்ளார்.

Update: 2022-01-04 16:16 GMT
ஐதரபாத்,

பா.ஜ.க. தலைவர் ஜே பி நட்டா  தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, கரீம்நகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் தெலுங்கான மாநில பாஜக தலைவருமான பண்டி சஞ்சய் குமார், தெலுங்கானாவில் அரசு வேலை பெறுவதற்கும், வேலை மாற்றம் செய்வதற்கும் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மண்டல அளவிலான முறையினை கண்டித்து ‘ஜாகரானா’ என்ற பெயரில் இரவில் போராட்டம் நடத்தினார். 

இந்த புதிய சட்டம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பாதித்துள்ளது என கூறி அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் இரவில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.அதில் 150க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது மாநில அரசால் விதிக்கப்பட்டுள்ள, பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும், அரசு பணியாளர்களை தாக்கியதாவும், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதையடுத்து, நேற்று பிற்பகல் கரீம்நகர் நீதிமன்றத்தில் சஞ்சய் ஆஜர்படுத்தப்பட்டார். இவரின், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

தெலுங்கானா காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அவர் இன்று செகந்திராபாத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

“நான் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வந்திருக்கிறேன். இங்கு கடந்த 2 தினங்களாக நடந்தது ஜனநாயக படுகொலை. இது ஒரு வகை சர்வாதிகாரமாகும். அளவு கடந்த ஊழலால் நிரம்பிய மாநிலங்களில் ஒன்றாக தெலுங்கானா உள்ளது.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டி.ஆர்.எஸ்) அரசின் மக்கள் விரோத போக்கை இந்த செயல் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. சந்திரசேகர் ராவ் தன் மன சமநிலையை இழந்துள்ளார். 

ஜனநாயக விரோத இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும். இது ஒரு ‘தர்ம யுத்தம்’ ஆகும். இந்த போராட்டத்தில் சட்டரீதியாக செயல்பட்டு வெல்வோம். எக்காரணம் கொண்டும் சட்டத்தை மீற மாட்டோம்.

தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.”

இவ்வாறு நட்டா கூறினார்.

மேலும் செய்திகள்