புதுச்சேரி மாநிலத்திலும் கால் பதித்த “ஒமைக்ரான்”...!

புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-28 07:39 GMT
கோப்புப்படம்
புதுச்சேரி, 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் கூறினர்.

ஒமைக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தின. இருப்பினும், இந்தியா உள்பட 116 நாடுகளில் ஒமைக்ரான் பரவி விட்டது. இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 21 மாநிலங்களில் ஒமைக்ரான் கால் பதித்து விட்டது. அதிக பாதிப்பு நிறைந்த தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன.

இந்த வாரம் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் பெருமளவு கூடுவது வழக்கம். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 18 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநிலத்தில் 80 வயது முதியவருக்கும், 20 வயதுடைய இளைஞர் ஒவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பாதிப்புள்ள இருவரும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்