ஒடிசாவில் ஜாவத் புயல் பாதிப்பு; ரூ.507 கோடி சிறப்பு நிதி உதவி அறிவிப்பு

ஜாவத் புயல் பாதித்த ஒடிசாவில் ரூ.507 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி உதவி தொகை அறிவிப்பினை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

Update: 2021-12-27 22:37 GMT

பூரி,

வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழந்து, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் இடையே டிசம்பர் முதல் வார இறுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.  இதன்படி, மேற்கு வங்காளம், ஒடிசாவில் கன முதல் மிக கனமழையும், அசாம், மேகாலயா, திரிபுராவின் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டது.

புயல் அபாயம் காரணமாக மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாக்கள், புர்பா மெதினிபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படையினரும் தயார்நிலையில் இருந்தனர்.  மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரை கடந்த ஜாவத் புயலால், கனமழை பொழிந்து, ஒடிசாவில் பல ஏக்கர் கணக்கிலான பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டன.  இதனை முன்னிட்டு, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, ஜாவத் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.507 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி உதவி தொகை அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.  இது விவசாயிகளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்