இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358- ஆக உயர்வு
கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358- ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் 114- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 122- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 88 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 67 பேருக்கும், தெலுங்கானாவில் 38- பேருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.