எ.டி.எம். இயந்திரத்தையே தூக்கிசென்ற கொள்ளையர்கள் - போலீஸ் சோதனைச்சாவடி அருகே துணிகரம்
போலீஸ் சோதனைச்சாவடி அருகே உள்ள எ.டி.எம். மையத்தில் இருந்து எ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச்சென்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் தாஜ்கஞ்ச் நகரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலால் ஹரியா என்ற பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தனியார் வங்கிக்கு சொந்தமான எ.டி.எம் மையம் உள்ளது. அங்குள்ள எ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.
இந்நிலையில், அந்த எ.டி.எம் மையத்திற்குள் இன்று அதிகாலை 2.45 மணியளவில் நுழைந்த கொள்ளைகும்பல் எ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், இயந்திரத்தை திறக்கமுடியாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் எ.டி.எம் இயந்திரத்தை தரையில் இருந்து முழுவதும் பெயர்த்து துக்கிச்சென்றனர்.
வாடிக்கையாளர் எ.டி.எம் மையத்தில் இன்று காலை பணம் எடுக்க வந்தபோது எ.டி.எம் இயந்திரம் உடைத்து எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எ.டி.எம் இயந்திரத்தை துக்கிச்சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.