போதைப்பொருள் கடத்தல்; பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பக்கிச்சூட்டில் வங்காளதேச நபர் பலி

மேற்குவங்காள எல்லையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வங்காளதேச நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

Update: 2021-12-22 14:33 GMT
கொல்கத்தா,

வங்காளதேசத்தில் இருந்து மேற்குவங்காள எல்லை வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் மல்டா மாவட்டம் நவாடா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, வங்காளதேசத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களை கடத்திக்கொண்டு அதிகாலை 1.40 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் அந்த நபர்களை நிற்கும்படி கூறினர்.

ஆனால், போதைப்பொருள் கும்பல் எல்லைப்பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். கூர்மையான ஆயுதங்களை கொண்டு பாதுகாப்பு படையினர் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, எல்லைப்பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கடத்தல் கும்பலை சேர்ந்த இப்ராகிம் என்ற நபர் உயிரிழந்தார். இப்ராகிம் வங்காளதேசத்தை சேர்ந்தவன் ஆவார். மேலும், எஞ்சிய நபர்கள் வங்காளதேசத்திற்கே தப்பியோடிவிட்டதாக எல்லைப்பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்