நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 123 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மராட்டியத்தில் 57, டெல்லியில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானா 20, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 18, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம், சண்டிகர், தமிழகம், லடாக், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 200 ஐ தாண்டிய நிலையில் பண்டிகைகள் வருவதால் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.