சத்தீஸ்கர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள காண்டரஸ் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வனப்பகுதியில் நக்சல் பிரிவு சிறப்பு போலீஸ் படையினர் இன்று அதிகாலை சோதனை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து மேலும் சில நக்சலைட்டுகள் தப்பிச்சென்றனர். அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.