லகிம்பூர் கேரி விவகாரம்: மகன் பற்றிய கேள்வியால் கோபம் அடைந்த மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா
மகன் பற்றிய கேள்வியால் கோபம் அடைந்த மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா, நீங்கள் என்ன பைத்தியமா? என செய்தியாளரை சாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து உத்தரபிரதேச அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு விசாரணைக்குழு இந்த வழக்கை துரிதமாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக லகிம்பூர் கோர்ட்டில் சிறப்பு விசாரணை குழு சார்பில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், லகிம்பூர் கிரி விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இருந்து, அது கவனக்குறைவாக நடைபெற்றதாக தெரியவில்லை, மாறாக குற்றம் சாட்டப்பட்டவர்களால் கொல்லும் நோக்கில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி.
எனவே ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய மந்திரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய மந்திரி அஜஸ் மிஸ்ரா, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவை சந்தித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அஜய் மிஸ்ராவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். நீங்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா? திருடர்களே" என்று ஆவேசமாகப் பேசினார். மேலும் அந்த செய்தியாளரின் மைக்கையும் பறிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
#WATCH | MoS Home Ajay Kumar Mishra 'Teni' hurls abuses at a journalist who asked a question related to charges against his son Ashish in the Lakhimpur Kheri violence case. pic.twitter.com/qaBPwZRqSK
— ANI UP (@ANINewsUP) December 15, 2021