பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணியை உடனடியாக துவக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவு பொருட்கள் வழங்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும்படி கடந்த 2011ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை.
நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இதில் அவர்கள் செய்யும் தொழிலை கருத்தில் கொள்ள கூடாது. எனவே பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் மற்றும் ஆதார் அட்டை ஆகியவை வழங்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துவங்க வேண்டும். இந்த உத்தரவு மீதான நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.