எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் அளிக்க தயார்: கர்நாடக முதல்-மந்திரி

மதமாற்ற தடை சட்டம் உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் அளிக்க அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-11 16:19 GMT
மதமாற்ற தடை சட்டம்

கர்நாடகத்தில் மதமாற்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை தடுக்கும் வகையில் ஏற்கனவே கா்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று பா.ஜனதா அரசு கூறி இருந்தது. இந்த நிலையில், பெலகாவியில் திங்கட்கிழமை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின் போது மதமாற்ற தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அந்த சட்டத்தை அமல்படுத்தும்படி அரசுக்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், இந்து அமைப்புகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதமாற்ற தடை சட்டத்தை பெலகாவி கூட்டத்தொடரில் அமல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும், அந்த சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பதில் அளிக்க தயார்

பெலகாவி சுவர்ண சவுதாவில் வருகிற 13-ந் தேதியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர் கொள்ள அரசு முழு தயார் நிலையில் இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் எழுப்பும் எந்தவிதமான பிரச்சினைகளாக இருந்தாலும், அந்த பிரச்சினைகளுக்கு உரிய பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது.

மதமாற்ற தடை சட்டம் உள்ளிட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், அதற்கு உரிய பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது. மதமாற்ற தடை சட்டம் மட்டும் இல்லை, எந்த விதமான சட்டம், திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும், எதிர்க்கட்சி என்பதால், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க தான் செய்யும். எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதில் அளிப்பது அரசின் கடமையாகும்.

வாரணாசி பயணம்

வருகிற திங்கட்கிழமை தொடங்கும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு விட்டு, அன்றைய தினம் மாலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்ல இருக்கிறேன். வாரணாசியில் நடைபெறும் பா.ஜனதா முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு 14-ந் தேதி அயோத்திக்கு செல்ல உள்ளேன். அன்றைய தினம் மாலையில் உத்தரபிரதேசத்தில் இருந்து திரும்ப இருக்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் விமான பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணம் குறைவாகும். பரிசோதனை செய்ய நவீன கருவிகள், தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கட்டண தொகை அதிகமாக இருக்கிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து கூடிய விரைவில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்