ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டுகேட்ட பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக்கொன்ற இளைஞர்
ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்ட நபரை பக்கத்து வீட்டுக்கார இளைஞர் அடித்துக்கொன்றுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மல்வானி நகரில் உள்ள அம்புஜ்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் குன்னர் (40). இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே ஸ்பீக்கர் வைத்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார்.
அப்போது, சுரேஷ்குமார் வசித்து வரும் வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் ஆசிப் அலி சந்த் அலி ஷேக் (25) என்ற இளைஞன் அங்கு வந்துள்ளார். அந்த இளைஞன் சுரேஷிடம் ஸ்பீகர் சத்தம் அதிகமாக உள்ளது எனவும், ஒலி அளவை குறைத்து வைக்கும்படியும் கேட்டுள்ளார். ஆனால், ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க முடியாது என சுரேஷ் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷ் குமாரை ஆசிப் அலி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அவரது தலையை தரையில் அடித்துள்ளார். ஆசிப் அலி தாக்கியதில் சுரேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக, அக்கம்பக்கத்தினர் சுரேஷ்குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சுரேஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.