சாதிரீதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பா? - மத்திய அரசு பதில்
சாதிரீதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
புதுடெல்லி,
சுதந்திரம் பெற்றது முதல் நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. தவிர பிற சாதிரீதியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
சாதிரீதியான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஏதாவது திட்டம் அல்லது கொள்கையை உருவாக்கியுள்ளதா என்ற கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இவ்வாறு கூறியுள்ளார்.
‘மத்திய மந்திரிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்தாலோசித்தபிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதி மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.