இந்து மதக்கடவுள் சிலையை அவமதித்த நபர் கைது
இந்து மதக்கடவுள் விநாயகர் சிலையை காலால் மிதிப்பது போன்று புகைப்படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள டென்கலங்சோ கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்து மதக்கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. மிகவும் புராதானமான இந்த விநாயகர் சிலையை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், அந்த மலைப்பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் சென்ற அர்பஸ் கான் என்ற இளைஞன் இந்துமதக்கடவுள் விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக காலணி அணிந்தவாரு தனது காலால் விநாயகர் சிலையை மிதிப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளான். அந்த புகைப்படத்தை அர்பஸ் கான் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளான்.
இந்துமதக்கடவுளின் சிலையை அர்பஸ் கான் அவமதித்து வெளியிட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விநாயகர் கோவில் கமிட்டி சார்பில் பைதலங்சோ போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரையடுத்து இந்துமத கடவுள் விநாயகர் சிலையை அவமதித்து புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த இளைஞன் அர்பஸ் கானை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அர்பஸ் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.