நோயாளிகளுக்கு சிகிச்சை மையங்களில் கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை - புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு

கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-05-08 17:01 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.  

இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், பல்வேறு கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய அறிவுறுத்தலை வழங்கிய  மத்திய சுகாதார அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது. 

நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள பிரத்தியேக வார்டுகளில் அனுமதிக்கலாம் எனவும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் மருத்துவ சேவைகள் மறுக்கக் கூடாது எனவும்,வசிப்பிட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வில்லை என்கிற காரணத்திற்காக எந்த ஒரு நோயாளிக்கும் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்