கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்த அடுத்த நாளே பணிக்கு திரும்பிய புனே டாக்டர்

கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியான இந்த காலத்தில் டாக்டர்கள் சேவை அளப்பரியதாக விளங்குகிறது.;

Update:2021-05-06 09:18 IST

இந்த நிலையில் புனேயை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான முகுந்த் பெனுர்கர் என்பவர் தனது தந்தை கொரோனாவால் இறந்த அடுத்த நாளே பணிக்கு திரும்பி தனது சேவையை தொடங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

புனேயில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்ததில் இருந்து நானும் எனது மனைவியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். வயதான எனது பெற்றோரின் உடல்நிலை கருதி அவரை நாக்பூரில் உள்ள எனது சகோதரரின் வீட்டிற்கு அனுப்பினோம். ஆனால் தற்போதைய 2-வது அலை கொரோனா பரவலின்போது எனது சகோதரர் கடந்த மாதம் தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் எனது பெற்றோருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

நாக்பூரில் எனது சகோதரருக்கும், பெற்றோருக்கும் படுக்கை வசதி கிடைக்காததால், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து நான் பணி செய்யும் ஆஸ்பத்திரியிலேயே கொண்டு வந்து அனுமதித்தனர். ஆனால் 85 வயதான எனது தந்தையை காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்த போது எனது தாயும், சகோதரரும் சிகிச்சையில் இருந்தனர். எனவே நானே தனியாக இறுதி சடங்கை செய்தேன்.

எனது தந்தை நான் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பப்படி அடுத்த நாளே பணிக்கு திரும்பினேன். இதுவே எனது தந்தைக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்