கேரள சட்டசபை தேர்தல் முடிவு பட்டியல் கவர்னரிடம் ஒப்படைப்பு
கேரள சட்டசபை தேர்தல் முடிவு பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி டீகாராம் மீனா கவர்னர் ஆரிப்முகம்மது கானிடம் ஒப்படைத்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது. பதிவான ஒட்டுகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவு பட்டியலை கவர்னர் ஆரிப்முகம்மது கானிடம் தலைமை தேர்தல் அதிகாரி டீகாராம் மீனா வழங்கினார். தொடர்ந்து இந்த பட்டியலை கவர்னர், சட்டசபை செயலாருக்கு அனுப்பி வைப்பார்.
தேர்தல் முடிவின் அடிப்படையில் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்க உரிமை கோரியதும் அவர்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து மற்ற மந்திரிகள் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்கள்.
இடதுசாரி ஜனநாயக முன்னணியில் உள்ள கூட்டணி கட்சிகளின் பொதுக்குழு கூட்டம் வருகிற 17-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மறுநாள் (18-ந் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு குறித்தான தேதி முடிவு செய்யப்படும் என்று மாநில செயலாளர் விஜயராகவன் (தற்காலிக பொறுப்பு) தெரிவித்து உள்ளார்.