தாமதமாக வேலைக்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் பெண் விவசாயியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - உப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பு
தாமதமாக வேலைக்கு வந்ததை தட்டிக்கேட்டதால் பெண் விவசாயியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
உப்பள்ளி,
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பொம்மசமுத்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் காதர்ஷாப் மணியார் (வயது 35). தொழிலாளியான இவர், அதேகிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயியான நீலவவ்வா என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி அன்று காதர்ஷாப், தோட்டத்திற்கு ேவலைக்கு தாமதமாக வந்துள்ளார்.
இதனை நீலவவ்வா தட்டிகேட்டுள்ளார். அப்போது நீலவவ்வாவுக்கும், காதர்சாப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீலவவ்வா, காதர்ஷாப்பிடம் நாளை முதல் நீ வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதர்ஷாப் தோட்டத்தில் கிடந்த கோடரியை எடுத்து வந்து நீலவவ்வாவின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் நீலவவ்வா படுகாயம் அடைந்து நிலைகுலைந்து கீழேவிழுந்தார். அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நீலவவ்வா உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலவவ்வாவை கொன்றுவிட்டு தலைமறைவான காதர்சாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக உப்பள்ளி ஓசூர் 5-வது குற்றப்பிரிவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.என்.கங்காதர் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் வேலைக்கு தாமதமாக வந்ததை தட்டி கேட்ட தகராறில் நீலவவ்வாவை, காதர்ஷாப் கோடரியால் தாக்கி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதனால் காதர்ஷாப்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல் உப்பள்ளி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 26). இவர், ேஜாதிஹள்ளி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் இங்கள்ளி என்பவரின் வீ்ட்டில் நகை, பணத்தை திருடிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு(2020) உப்பள்ளி டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் திருட்டு வழக்கில் மஞ்சுநாத்துக்கு, ஓராண்டு சிறையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உப்பள்ளி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி தொட்டபசப்பா தீர்ப்பு அளித்தார்.