டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேலும் ஒரு விவசாயி தூக்கிட்டு தற்கொலை
டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த விவசாயி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சண்டிகர்,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்ட நிலையிலும், அவர்கள் வீடு திரும்பும் நிலை இன்னும் அமையவில்லை. அரசுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தியின் உச்சிக்கு செல்லும் விவசாயிகள் சிலர் இந்த சட்டங்களுக்கு எதிராக தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். அந்தவகையில் அரியானாவின் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்பிர் (வயது 49) என்ற விவசாயியும் தூக்குப்போட்டு தனது உயிரை விட்டு உள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த இவர் நேற்று திக்ரி போராட்டக்களத்தில் இருந்து சுமார் 7 கி.மீ.க்கு அப்பால் சென்று ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்வதற்கு முன் ராஜ்பிர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில், வேளாண் சட்டங்கள்தான் தனது சாவுக்கு காரணம் எனவும், இந்த சட்டங்களை திரும்பப்பெற்று தனது இறுதி ஆசையை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்றிருந்த மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லி போராட்டக்களங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.