கேரளாவில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்..? மத்திய அமைச்சர் டுவீட்டால் குழப்பம்

கேரளாவில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் இல்லையா? மத்திய அமைச்சர் டுவீட்டால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-03-06 09:00 GMT
திருவனந்தபுரம்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் செல்வாக்கு பெறாத மாநிலங்கள். எனவே, இந்த ஐந்து மாநிலங்களிலும் காலை வலுவாக ஊன்ற பா.ஜ.க கடும் முயற்சி  எடுத்து வருகிறது. 

இந்தநிலையில், இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் செயலாக்கத்தில் பெரும் பங்காற்றியதால் ‘மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கரம் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க.வில் இணைந்தார். எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீதரன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், கேரளா மாநில பா.ஜ.க முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான முரளிதரன் அவருடைய டுவிட்டர் பதிவில், ‘கேரள பா.ஜ.க, ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கும். நாம், சி.பி.எம்மையும், காங்கிரஸையும் தோற்கடிப்போம்’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து, முரளிதரன் முதல்வர் வேட்பாளர் என்று செய்திகள் வெளியானது.

இந்தநிலையில், முரளிதரன், ‘ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளர் என்று கட்சி எந்த அறிவிப்பையும் வெளியிவில்லை. ஊடகங்கள் வாயிலாக கட்சி ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். அதனையடுத்து, தற்போதைய தலைவர் சுரேந்திரனிடம் கேட்கும் போது கட்சி அப்படி ஏதும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்’ என்று விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன்  நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறும்" பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் வர வேண்டும் எனக் கூறவில்லை. ஸ்ரீதரனை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் எனத் தெரிவித்தேன்.

ஆனால், பாஜக முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் என்று நான் அறிவிக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சியின் விருப்பம், மக்களின் விருப்பத்தைத்தான் நான் நேற்று தெரிவித்தேன். நான் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்