கொரோனா தடுப்பூசியை வீட்டில் வைத்து போட்டு கொண்ட கர்நாடக மந்திரியால் சர்ச்சை

கர்நாடக மந்திரி பி.சி. பாட்டீல் வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டதற்கு மத்திய அரசு விளக்க அறிக்கை கேட்டுள்ளது.

Update: 2021-03-02 13:42 GMT
பெங்களூரு,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்படி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை நாட்டில் மொத்தம் 1.43 கோடி பேருக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை வியாதிகளை உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணிகள் நேற்று தொடங்கின.

இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டு கொண்டனர்.  இன்று 2வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கர்நாடகாவில் மந்திரி பி.சி. பாட்டீல் ஹாவேரி நகரில் ஹிரேகெரூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசியை இன்று போட்டு கொண்டார்.  அவருக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி போடுவது போன்ற புகைப்படம் செய்தி இதழ்களில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறும்பொழுது, விதிகளின்படி இதற்கு அனுமதி இல்லை.  மாநில அரசிடம் இது தொடர்புடைய விளக்க அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக மந்திரி பாட்டீல் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, நான் தடுப்பூசி போட்டு கொள்ள மருத்துவமனைக்கு சென்றால், எனது வருகையால் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், எனது வீட்டில் மக்களை சந்தித்தபடி, தடுப்பூசியும் போட்டு கொள்ள முடியும்.  இதில் என்ன தவறு உள்ளது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்