கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் அரசின் அமைதிக்கு காரணம் என்ன? வேளாண் அமைப்பு தலைவர் சந்தேகம்
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசு கடந்த சில நாட்களாக அமைதி காத்து வருவது குறித்து வேளாண் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் நேற்று சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.;
பேச்சுவார்த்தை எப்போது?
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் 3 மாதங்களை கடந்தும் வீரியமாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனால் ரெயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு வகையில் தங்கள் போராட்டங்களை அவர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.ஆனாலும் அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவது எப்போது என தெரியவில்லை. இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் மவுனமே நீடித்து வருகிறது.
ஏதோ நடக்கப்போகிறது
அரசின் இந்த அமைதி குறித்து பாரதிய கிசான் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் சந்தேகம் வெளியிட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-
கடந்த 15-20 நாட்களாக அரசு கடைப்பிடித்து வரும் மவுனம், ஏதோ நடக்கப்போகிறது என்பதையே காட்டுகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக சில நடவடிக்கைகள் குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது.ஆனால் விவசாயிகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமல் விவசாயிகள் திரும்பமாட்டார்கள். தங்கள் பயிர்களையும், போராட்டத்தையும் ஒரே நேரத்தில் கையாளுவார்கள். நேரம் வரும்போது அரசு பேச்சுவார்த்தை நடத்தட்டும்.
மகா பஞ்சாயத்துகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருகிற 24-ந்தேதி வரை விவசாயிகளின் மகா பஞ்சாயத்துகள் நடத்தப்படும். பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்கள் பயிர்களை அழித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அத்தகைய செயலுக்கான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் அப்படிப்பட்ட செயலில் இறங்க வேண்டாம் என அரசு அறிவுறுத்துவது ஏன்?
உத்தரபிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை விற்கப்படவில்லை என்றால் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.