எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் கவர்னர் ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்; சிவசேனா கூறுகிறது

எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ராஜ தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.;

Update:2021-03-02 15:37 IST
பா.ஜனதா எச்சரிக்கை
புனேவை சேர்ந்த பூஜா சவான் என்ற இளம்பெண் சமீபத்தில் தான் வசித்து வந்த கூடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் இளம்பெண்ணின் தற்கொலைக்கும், வனத்துறை மந்திரியாக இருந்த சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்குவோம் என பா.ஜனதா எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சஞ்சய் ரதோடு தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-

ராஜ தர்மம்
மகா விகாஸ் அகாடி அரசின் கையில் தான் ஆட்சி அதிகாரம் என்ற ஆயுதம் உள்ளது. இதற்காகவே மந்திரி ராஜினாமா விவகாரத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது ராஜ தர்மத்தை சரியாக பின்பற்றுகிறார்.அதே ராஜ தர்மத்தை கடைப்பிடிக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு உள்ளது. பா.ஜனதா நியமித்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இதுபோன்ற பொறுப்பு அதிகமாகவே உள்ளது.கவர்னர் தனது ஒதுக்கீட்டில் நியமிக்க வேண்டிய 12 எம்.எல்.சி.க்களின் பரிந்துரைகளை அங்கீகரிக்க மறுக்கிறார். அவர் தனது ராஜ தர்மத்தை பின்பற்றவில்லை.

அரசியல் லாபம்
புனேவை சேர்ந்த 23 வயது பெண்ணின் மரணத்தை வைத்து பா.ஜனதா அரசியல் லாபத்தை பெற முயற்சிக்கிறது. அதேசமயம் மும்பையில் தாத்ரா, ஹவேலி எம்.பி. மோகன் தேல்கர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பா.ஜனதாவினர் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டவில்லை. தேல்கரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய மராட்டிய அரசுக்கு பா.ஜனதா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் ஒதுக்கீட்டில் நியமிக்கப்படும் 12 மேல்-சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தது. இதை அடுத்து சிவசேனா தலைமையிலான ஆளும் மகாவிகாஸ் அகாடி அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டிய 12 பேரின் பட்டியலை கவர்னரிடம் வழங்கியது. ஆனால் அவர் புதிய உறுப்பினர்கள் நியமனத்தில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்