மே மாதம் ‘நெட்' தேர்வு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) சார்பில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித்தேர்வு (நெட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.;

Update:2021-02-03 03:35 IST
அந்த வகையில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்காகவும் யு.ஜி.சி. நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த இருக்கிறது. அதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், யு.ஜி.சி. நெட் தேர்வு வருகிற மே மாதம் 2-ந் தேதி தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 2 தாள்களை உள்ளடக்கியதாக இருக்கும். காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஒரு ஷிப்டிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு ஷிப்டிலும் என தேர்வு நடத்தப்பட உள்ளது. 2 தாள்களும் சேர்த்து 150 கொள்குறி வகை வினாக்களாக கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும். இந்த தேர்வு கணினி வாயிலாக நடைபெறும்.

இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு மார்ச் மாதம் 3-ந் தேதி கடைசி நாளாகும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு தேர்வர்கள் www.nta.ac.in, https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்