விவசாயிகள் போராட்டம்; போலீஸ் உயரதிகாரிகள் ராஜினாமா: போலி செய்திகளை பரப்பிய நபர் கைது
விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக போலீஸ் உயரதிகாரிகள் ராஜினாமா என போலி செய்திகளை பரப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 69வது நாளாக இன்றும் தொடருகிறது.
விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக, கடந்த இரு நாட்களாக போலீஸ் துறையில் உயர்மட்ட அளவில் அதிகாரிகளாக பணிபுரிவோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதுபற்றி டெல்லி போலீசுக்கு உட்பட்ட சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் பிரிவு விசாரணை மேற்கொண்டது.
இதில், ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் வசித்து வந்த ஓம் பிரகாஷ் தேத்தர்வால் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
கிசான் அந்தோலன் ராஜஸ்தான் என்ற பெயரில் முகநூல் கணக்கு ஒன்றை பிரகாஷ் தொடங்கியுள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் எடுத்த மற்றொரு மாநிலத்தின் காவல் அதிகாரிகளின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
இந்த வீடியோவை, டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் இணைத்து, டெல்லி போலீசார் அதற்கு எதிர்வினையாற்றியது போல் சித்தரித்துள்ளார்.
இதனையடுத்து டெல்லி போலீசார், செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி ஆராயாமல் அவற்றை பகிரவோ அல்லது பதிவிடவோ வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.