விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது - பிரதமர் மோடி

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-15 11:40 GMT
குஜராத், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. எனினும், விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான பல கட்ட பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதியாக உள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படும். எதிர்க்கட்சிகளில் இருந்து விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர். அவர்களுடைய ஆட்சியில் அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை. இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது, இவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு காண அரசு தயார். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக குஜராத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், எரிசக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் செய்திகள்