முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கே தடுப்பூசி போட வேண்டும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே தடுப்பூசி போட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் பதிவு செய்பவர்களுக்கு போடக்கூடாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் உலகளவில் தயாராகி வருகின்றன. இதில் சில நாடுகள் அவசர பயன்பாட்டுக்கு தடுப்பூசிகளை பயன்படுத்திக்கொள்ள தொடங்கியும் இருக்கின்றன.
அதே நேரம் இந்தியாவிலும் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. எனவே தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தொடங்கி உள்ளன.
அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. அதில் கூறப்பட்டு உள்ள முக் கிய அம்சங்கள் வருமாறு:-
* நாளொன்றுக்கு ஒவ்வொரு அமர்வும் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டவுடன், தடுப்பூசி போடப்பட்டவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா? என 30 நிமிடம் கண்காணிக்க வேண்டும்.
* முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவருக்கே தடுப்பூசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் பதிவு செய்து தடுப்பூசி போடும் வழிமுறைகளுக்கு இடமில்லை.
* ஒரு மாவட்டத்துக்கு முடிந்தவரை ஒரே உற்பத்தியாளரின் தடுப்பூசியை வழங்க வேண்டும். வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
* தடுப்பூசி எடுத்துச்செல்லும் கேரியர், குப்பிகள் மற்றும் தடுப்பூசியை பாதுகாக்கும் ஐஸ்கட்டிகள் நேரடியாக சூரிய ஒளியில் படுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி மையத்துக்கு பயனாளி வரும் வரையில், தடுப்பூசி மற்றும் நீர்மங் களை தடுப்பூசி கேரியரிலேயே வைத்திருக்க வேண்டும்.
* கொரோனா தடுப்பூசிக்கான பட்டியலிடப்பட்ட பயனாளிகளை நிகழ்நேர அடிப்படையில் கண்டறிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தளமான ‘கோ-வின்’ இணையதளம் பயன்படுத்த வேண்டும். ‘கோ-வின்’ இணையதளத்தில் பதிவு செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்ற 12 வகையான புகைப்பட அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
* 50 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களை அடையாளம் காண சமீபத்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்தலாம்.
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.