பிரதமர் மோடி தலைமையில் வருகிற 7ந்தேதி ஆக்ரா மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் தொடக்கம்
பிரதமர் மோடி வருகிற 7ந்தேதி ரூ.8,397.62 கோடி மதிப்பிலான ஆக்ரா மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உள்ள 15வது பட்டாலியனுக்கான ராணுவ அணிவகுப்பு மைதானம் ஒன்றில் வருகிற 7ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஆக்ரா மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அன்று காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வழியே தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பிற
அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரூ.8,397.62 கோடி மதிப்பிலான இந்த ஆக்ரா மெட்ரோ ரெயில் திட்டம் மொத்தம் 29.4 கி.மீ. தொலைவிலான இரு வழித்தடங்களை உள்ளடக்கியது.
அவை தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, சிகந்த்ரா ஆகிய சுற்றுலா தலங்களை ரெயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுடன் இணைக்கிறது.
இதனால் ஆக்ரா நகரின் 26 லட்சம் குடியிருப்புவாசிகள் மற்றும் ஆண்டுதோறும் வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாவாசிகள் பயனடைவார்கள் என தெரிவித்து உள்ளது.