சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது : கேரளா போலீஸ் இணையதளம் தகவல்

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது என கேரளா போலீஸ் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-12-05 08:12 GMT
Image courtesy : thehindu.com
திருவனந்தபுரம்: 

சபரிமலையில்  50 வயதுக்கு குறைவான பெண்களுக்கு அனுமதியில்லை,’ என கேரள போலீஸ் இணைய  தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50  வயதுக்கு உட்பட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கி கடந்த 2018ல் வரலாற்று சிறப்புமிக்க  தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்தது. 

இதையடுத்து, சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கேரள  அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், இதை எதிர்த்து பல இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதையும் மீறி சில பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர். இதனால்,  கலவரம் வெடித்தது. இதையடுத்து, இளம்பெண்கள் யாரையும் தரிசனத்துக்கு  அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கொரோனாவுக்கு பின்னர், கடந்த 16ம்  தேதி தொடங்கிய மண்டல பூஜைகளின்போது பக்தர்கள் தரிசனத்துக்கு  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  ஏற்கனவே, மண்டல, மகர விளக்கு காலத்தில் தரிசிக்க, கடந்த நவம்பர்  1ம் தேதி  தொடங்கிய ஆன்லைன் முன்பதிவு 2 நாட்களில் நிறைவடைந்தது. தற்போது,  கூடுதல் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் முன்பதிவு மீண்டும்  தொடங்கி உள்ளது.  

கேரள போலீசார் நிர்வகித்து வரும்  இணைய தளத்தில்,  நேற்று முதல் புதிய வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில் 10 முதல் 50  வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட  மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா காலம்  என்பதால் 10  வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 சபரிமலையில் இளம்பெண்கள்  தரிசனம் செய்யலாம் என கடந்த 2018ல் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு  தொடர்பாக அப்பீல் செய்யப்பட்டுள்ளது.  ஆனால், ஏற்கனவே அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்  தடை விதிக்கவில்லை. இந்நிலையில், பெண்களுக்கு கேரளா போலீஸ் விதித்துள்ள திடீர் கட்டுப்பாடு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள போலீசின் அறிவிப்பு பற்றி தேவசம்போர்டு தலைவர் வாசு கூறுகையில், 

50 வயதிற்குட்பட்ட பெண்களின் நுழைவு இப்போது ஒரு பிரச்சினை அல்ல. சபரிமாலையில்  அமைதியான நிலைமை நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பக்தர்களுக்கு நிறைவேற்ற இன்னும் பல முக்கிய பிரச்சினைகள் எங்களுக்கு உள்ளன

சம்பந்தபட்ட இணையதளத்தை கேரள போலீஸ் தான் செயல்படுத்துகிறது. இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பது தேவசம் போர்டின் நோக்கமல்ல. இது குறித்த  வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் சுப்ரீம்  கோர்ட்  விளக்கம் கேட்டால் தேவசம் போர்டு விளக்கம் அளிக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்