இந்தியாவில் புதிதாக 36,652 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,652 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவை தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட 2-வது நாடு இந்தியா.
இன்றும் கூட புதிதாக 36 ஆயிரத்து 652 பேர் கொரோனாவின் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 96 லட்சத்து 08 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பாதித்தவர்களை மீட்பதில் இந்தியா முதல் இடம் வகித்து, முன்மாதிரியாக திகழ்கிறது. அந்த வகையில் நமது நேர்த்தியான மருத்துவ கட்டமைப்பாலும், தரமான சிகிச்சையாலும் இன்று வரை 90 லட்சத்து 58 ஆயிரத்து 822 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 533 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடுகளுக்கு திரும்பினர்.
தற்போது நாட்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 09 ஆயிரத்து 689 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 39 ஆயிரத்து 700 ஆக அதிகரித்தது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.