பள்ளிகள் திறந்து 4 நாட்களில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 4 நாட்களில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,
கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளிகள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. எனினும், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவை எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் அறிவிப்புக்கேற்ப ஆந்திரத்தில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் தொடங்கி 4 நாள்களில் 575 மாணவர்களுக்கும் 829 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்னவீரபத்ருது,கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவே. மாநிலத்தில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து ஆசிரியர்களில் 99 ஆயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.இவர்களில் வெறும் 829- பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது” என்றார்.