மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை: 2 நாளாக மீட்கும் பணி தீவிரம்
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது.
போபால்,
எத்தனை முறை தான் கேட்பது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளின் அழுகுரலை.. இன்னும் எத்தனை உயிர்களைத்தான் கண் முன்னே இழப்பது மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால்.. நிச்சயம் இதற்கு விடை காண வேண்டும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. 4 நாட்களுக்கு பின் உடலைத்தான் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறிவிழுவது தொடர் கதையாகவே இருக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 3 வயது குழந்தை தவறி விழுந்துள்ளான்.
மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 3 வயது மகன் பிரகால்த், விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆழ்துளை கிணற்றை பார்த்துள்ளனர். அதில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர். மீட்பு படையினர் வந்து மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவனை மீட்கும் பணிகள் இன்றும் இரண்டாவது அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன. மீட்புப் படையினர் சிறுவனை உயிருடன் மீட்க போராடி வருகின்றனர்.
மீட்பு குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிவதாக நிவாரி மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்துள்ளார். தண்ணீர் அந்த கிணற்றில் 100 அடிக்கு கீழ் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
அந்த கிணற்றிலிருந்து குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் இறைவனை வேண்டியபடி தவித்து வருகிறார்கள்.