வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை - மத்திய மந்திரி பியூஸ் கோயல் தகவல்

வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-31 01:22 GMT
புதுடெல்லி, 

சந்தையில் அதிகரித்துவரும் வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உரிய நேரத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அதையடுத்து, தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம், தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில்லறை விலையில் வெங்காயத்தின் விலை கடந்த 3 நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து கிலோ ரூ.65க்கு விற்பனையாகிறது. விலை உயராமல் தடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுபோல், சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, உருளைக்கிழங்கையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் 2 நாட்களில் பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். இதன் மூலம் உள்ளூர் சந்தைகளில் விற்பனையை அதிகப்படுத்தி, விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்