இந்தியாவின் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 9 கோடியை கடந்தது: புதிதாக 63 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்து விட்டது. நாடு முழுவதும் புதிதாக 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இதுவரை வாய்க்காத நிலையில், அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்துவதுமே கட்டுப்படுத்துவதற்கான வழிகளாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிவதற்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
இதை உணர்ந்த உலக நாடுகள் கொரோனா பரிசோதனைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அந்தவகையில் இந்தியாவும் இந்த பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் முதல் தொற்று ஏற்பட்ட கடந்த ஜனவரி மாதம், புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது.
ஆனால் அதன்பிறகு நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த ஏராளமான ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில் 1,935 ஆய்வகங்கள் இரவு-பகலாக கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளன. இதில் 823 ஆய்வுக்கூடங்கள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.
இவ்வாறு பரிசோதனை வாய்ப்புகளையும், திறனையும் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் தினமும் சராசரியாக 11 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் 11 லட்சத்து 45 ஆயிரத்து 15 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் மூலம் நாடு முழுவதும் நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்து விட்டது. நேற்று முன்தினம் வரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறியுள்ளது.
இப்படி அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொண்டாலும் நாட்டின் தொற்று சாத்திய விகிதம் 8.04 என்ற நிலையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதுவும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த தேசிய சராசரியைவிட குறைவான விகிதத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
தொடர்ந்து அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதித்தவர்களை விரைவாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடிகிறது. இதில் லேசான பாதிப்புகளை கொண்டவர்கள் வீட்டிலும், தீவிர பாதிப்புடையோர் மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனால் நாள்தோறும் அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகள் குணம் பெறுகின்றனர். அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்து 632 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து ஆயிரத்து 927 ஆக உயர்ந்திருக்கிறது. குணமடைந்தோர் விகிதமும் 87.05 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 876 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முந்தைய நாளை விட 11 ஆயிரத்துக்கு மேல் குறைவாகும். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11.42 சதவீதமாக சரிந்திருக்கிறது.
புதிதாக குணமடைந்தவர்களில் 79 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கார், ஒடிசா மற்றும் டெல்லி ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக மராட்டியர்கள் மட்டுமே 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 63 ஆயிரத்து 509 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 8,764 பேரும், மராட்டியத்தில் 8,522 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 72 லட்சத்து 39 ஆயிரத்து 390 ஆக உயர்ந்து விட்டது.
இதைப்போல மேலும் 730 கொரோனா மரணங்கள் நாடு முழுவதும் பதிவாகி இருக்கின்றன. இதில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் (187 பேர்) மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 730 பேரையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 586 ஆகி இருக்கிறது. எனினும் நாட்டின் கொரோனா மரண விகிதம் 1.53 என்ற அளவிலேயே நீடிக்கிறது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.