இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி அடியெடுத்து வைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகம் எடுத்தது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வந்தது, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவும் கடந்த மாதம் 17-ந் தேதி ஒரே நாளில் 97 ஆயிரத்து 894 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது, நடுங்க வைத்தது. எங்கே போகிறது இந்த கொரோனாவின் பாதை என அத்தனைபேரையும் கேட்க வைத்தது.
ஆனால் அப்படிப்பட்ட கொரோனா தொற்று பரவல் இந்த மாதம் இறங்குமுகம் காணத்தொடங்கி இருப்பது நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இந்தியாவில் கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்தைக் கடந்து, 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 72 லட்சத்து 39 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்து ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 87 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 876 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்றுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 730 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.53 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 9 கோடியே 90 ஆயிரத்து 122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 45 ஆயிரத்து 15 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.