உலகின் தூய்மையான கடற்கரைகளின் பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு
உலகின் தூய்மையான கடற்கரைகள் என்ற பெருமையை பெறுவதற்கான பரிந்துரைக்கு இந்தியாவின் 8 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
நாட்டில் உள்ள கடற்கரைகளில் மிக தூய்மையான மற்றும் சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு உகந்தவை என்று அங்கீகரிக்கப்படுவதற்குரிய கடற்கரைகள் எவை என முடிவு செய்வதற்காக பிரபல சுற்றுசூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தேர்வு செய்யும் கடற்கரைகள் அதற்கான பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் தேர்வு செய்யப்படும் கடற்கரைகளுக்கு நீல கொடி அந்தஸ்து வழங்கப்படும். இந்த நீல கொடி அந்தஸ்து கிடைக்க பெற்ற கடற்கரைகள் உலகின் தூய்மையான கடற்கரைகள் என்று பெருமையை பெறும்.
இதன்படி, இந்தியாவின் 8 கடற்கரைகள் இந்த பெருமைமிகுந்த நீல கொடி அந்தஸ்துக்கான பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அவை குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டாமன் மற்றும் டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோடு மற்றும் பதுபித்ரி, கேரளாவில் உள்ள கப்பாடு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ருஷிகொண்டா, ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை மற்றும் அந்தமான் நிகோபார் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரை ஆகியவை ஆகும்.
இதனை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவகால மாற்றத்திற்கான அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.