மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் தடுப்பூசியை முதலில் நானே போட்டுக்கொள்வேன்; மத்திய மந்திரி ஹர்சவர்தன் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் முதலில் நானே போட்டுக்கொள்வேன் என்று மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறினார்.

Update: 2020-09-13 22:45 GMT
புதுடெல்லி,

மத்திய சுகாதார துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களுடன் ‘சண்டே சம்வத்’ நிகழ்ச்சியின் மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு, செலவு, பங்கு, குளிர்கால தேவைகள், உற்பத்தி காலக்கெடு போன்ற பல விஷயங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிக்கான விலையை செலுத்தும் திறனை பொருட்படுத்தாமல், மிகவும் தேவைப்படுகிறவர்களுக்கு முதலில் கிடைக்கும்.

தடுப்பூசியை பொறுத்தமட்டில், மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால், நானே முதல் ‘டோஸ்’ தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன்.

தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கென்று தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் அது 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் (வரும் மார்ச் மாதத்துக்குள்) தயாராகி விடும்.

மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரிகிறவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை அவசரமாக வழங்க பரிசீலித்து வருகிறோம். ஒருமித்த முடிவு எட்டப்பட்ட பின்னர் இது செய்யப்படும்.

தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை பொறுத்தவரையில், அரசு முழு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இயற்கையான தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மிக விரைவாக ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசி உதவும்.

பாதுகாக்கப்பட்ட மருந்தை நோய் எதிர்ப்பு சக்தி பற்றி அடுத்த சில மாதங்களில் ஒருமித்த கருத்து உருவாகும் என்று நம்புகிறோம்.

நோய்த்தொற்றின் வளர்ச்சியடைந்த தன்மை மற்றும் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் உள்ள முறையான சுகாதார சிக்கல்கள் பற்றிய சான்றுகள் ஆகியவற்றை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் நீண்ட கால தாக்கத்தை ஆராய்ச்சி செய்யுமாறு எய்ம்ஸ் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த தேசிய மருத்துவ பதிவேட்டை உருவாக்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் சுவாச அமைப்பு, சிறுநீரக அமைப்பு, இதயம், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றின் நிலை தொடர்பான சொந்த தரவுகளை உருவாக்குவதற்கு நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்