எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2020-09-03 13:48 IST
சென்னை,

புதுவையில் பிரபலமான அரசியல் பிரமுகர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் இவர் ஆரம்பத்தில் அதிமுகவில் 1985-90-ல் உருளையன்பேட்டை தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் விலகி திமுகவில் இணைந்த இவர் 2001-2006 மற்றும் 2006-2011 ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2012-2014 வரை புதுவை மாநில திமுக அமைப்பாளராகவும் பதவி வகித்தார்.

பின்னர் பாஜகவில் இணைந்தார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது பாஜகவிலிருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக புதுவையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் பல் வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார், கொரோனா தொற்று இருக்கலாம் என பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியான நிலையில் கடந்த ஒரு வாரமாக காலாபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு.  நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்