ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு தொற்று பாதிக்கும் - ராகுல் காந்தி கணிப்பு
ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு தொற்று பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்தது.
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “இன்று (நேற்று) கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி விட்டது. இதே வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அமைந்தால், ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்குள் நாட்டில் 20 லட்சம் பேருக்கு தொற்று பாதிக்கும்” என கூறி உள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு 10 லட்சத்தை கடக்கும் என்று கடந்த 14-ந் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் ராகுல் காந்தி நேற்றைய பதிவுடன் இணைத்து இருக்கிறார்.