ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு தொற்று: 8 லட்சத்தை கடந்தது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 5.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் காட்டி உள்ளது. தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இப்படி ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் உச்சம் தொடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு தொற்று பரவ 110 நாட்கள் ஆனது. அதில் இருந்து 53 நாளில் இப்போது 8 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.
இதன் வேகம் எப்படி அமைந்தது என்றால், கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 100 என்பது 1 லட்சம் ஆவதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 64. அதில் இருந்து 2 வாரங்களில் ஜூன் 3-ந் தேதி 2 லட்சம் ஆனது. 3 லட்சம் ஆவதற்கு ஆன நாட்கள் 10. அடுத்த 8 நாளில் இது 4 லட்சமாக அதிகரித்தது. அடுத்த 6 நாளில் இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்தது. அதில் இருந்து 10 நாளில் இந்த எண்ணிக்கை 7 லட்சமாக அதிகரித்தது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆகும்.
2 லட்சத்து 38 ஆயிரத்து 461 பேருக்கு பாதிப்பு என்ற வகையில் மராட்டியம் முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 140 பேருக்கு தொற்று உள்ளது.
4-ம் இடத்தில் குஜராத் (40 ஆயிரத்து 69), 5-ம் இடத்தில் உத்தரபிரதேசம் (33 ஆயிரத்து 700), 6-ம் இடத்தில் கர்நாடகம் (33 ஆயிரத்து 418), 7-ம் இடத்தில் தெலுங்கானா (32 ஆயிரத்து 224), 8-ம் இடத்தில் மேற்கு வங்காளம் (27 ஆயிரத்து 109), 9-ம் இடத்தில் ஆந்திரா (25 ஆயிரத்து 422), 10-ம் இடத்தில் ராஜஸ்தான் (23 ஆயிரத்து 174) உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் 519 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 123 ஆக உயர்ந்தது.
ஒரே நாளில் பலியான 519 பேரில் மராட்டியத்தில் மட்டும் அதிகபட்சமாக 226 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த பலியான 22 ஆயிரத்து 123-ல் மராட்டியம் 9,893 பேருடன் முதல் இடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் உள்ள டெல்லியில் 3,300 பேரும், 3-ம் இடத்தில் இருக்கிற குஜராத்தில் 2,022 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 5 லட்சத்து 15 ஆயிரத்து 385 ஆகும்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 ஆகும். அந்த வகையில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட 2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
குணம் அடைந்தோர் அளவு 62.78 சதவீதமாக இருக்கிறது.
நேற்று முன்தினம் மட்டும் நாடு முழுவதும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 511 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 10-ந் தேதி வரையில் பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.