அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து ராணுவ வீரர்களின் மனஉறுதியை சீர்குலைத்தது, மோடி அரசுதான் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில்

அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து ராணுவ வீரர்களின் மனஉறுதியை மோடி அரசுதான் சீர்குலைத்தது என்று பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

Update: 2020-07-06 22:55 GMT
புதுடெல்லி,

சீன எல்லை விவகாரத்தில் சந்தேகம் எழுப்புவதன் மூலம் ராணுவ வீரர்களின் மனஉறுதியை ராகுல் காந்தி சீர்குலைத்து வருவதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டி இருந்தார்.

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் ஒன்றில்கூட ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு காங்கிரஸ் சார்பில் அதன் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பதில் அளித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜே.பி.நட்டாவின் கருத்துகள், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்களின் மோசமான வடிவமாக அவரை காட்டுகிறது. சீனாவை எதிர்ப்பதில் பா.ஜனதாவும், மோடி அரசும் தங்களது சக்தியை செலவழித்து இருந்தால், சீன ஆக்கிரமிப்பு குறித்து இப்படி பொய் சொல்ல வேண்டி இருந்திருக்காது.

15 லட்சம் ஆயுதப்படையினர் மற்றும் 26 லட்சம் ராணுவ ஓய்வூதியர்களின் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து அவர்களின் மனஉறுதியை சீர்குலைத்தது, மோடி அரசுதான். மேலும், பா.ஜனதா முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாதுகாப்புக்கான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழு, ராணுவத்துக்கு செலவிடும் தொகை 1962-ம் ஆண்டுக்கு பிறகு மிகவும் குறைவாக இருப்பதாக கூறியது. அதாவது, 56 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவான தொகை செலவிடப்பட்டுள்ளது. இதுதான் மனஉறுதியை அதிகரிக்கும் செயலா?

அத்துடன், ஜெனரல் பி.சி.கந்தூரி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, ராணுவத்துக்கான செலவினத்தை அதிகரிக்க பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டை கோரியும், பிரதமர் அலுவலகம் தலையிடவில்லை என்று கூறியது. இதுதான் ராணுவத்தின் தயார்நிலை குறித்து பிரதமரின் அக்கறையா?

நமது ராணுவ தளவாடங்களில் 68 சதவீத தளவாடங்கள் பழமையானவை என்றும் அந்த குழு கூறியது. சீன எல்லை அருகே சாலை அமைப்பதற்கு போதிய நிதிஆதாரம் இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால், மோடி அரசு அதை காது கொடுத்து கேட்டதா?

சீன படைகளுக்கு எதிராக நமது ராணுவம் துப்பாக்கியை பயன்படுத்த அதிகாரம் கொடுக்காதது ஏன்? மோடி ஆட்சிக்காலத்தில் சீன ராணுவம் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை ஊடுருவியது எப்படி? சீனாவின் திட்டமிட்ட அத்துமீறலை தடுக்க தவறியது ஏன்?

இந்த கேள்விகளுக்கு ஜே.பி.நட்டா பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்